Published: 20 பிப் 2018
சீதை மற்றும் தங்க மான் பற்றிய புராணக்கதை
தங்க மான் மட்டும் இல்லாதிருந்தால், இலங்கை பேரரசு எரிந்து சாம்பலாகி இருக்காது.
அது மட்டுமின்றி, ராமாயணக் காவியத்தில் கண்களை சுண்டியிழுக்கும் எதிரி ராவணன் கிடைத்திருக்க மாட்டான்; இந்த கதையும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதலில் வெற்றி எந்தப் பக்கம் என்பதைக் குறித்ததாக இருந்திருக்காது.
சீதாவை மிகவும் கவர்ந்த அந்த மான், உண்மையில் தங்க மானோ அல்லது புள்ளிகள் கொண்ட சாதாரண புள்ளி மானோ – இது புராணக் கதையில் இடம்பெற்றுள்ளது என்பதால் ஆராயத் தேவையில்லை. ஒரு நம்பிக்கை, அவ்வளவே!
வால்மீகி இராமாயணத்தின் மூன்றாவது புத்தகமான ஆரண்டகாண்டம் இந்த மான் பற்றி இப்படி விவரிக்கிறது:
வெள்ளியிலான புள்ளிகள் கொண்ட ஓர் அழகிய தங்க மான். அது நகரும் போது, நீலமணிக்கற்கள், சந்திரகாந்தம், பிளாக் ஜெட்ஸ், செவ்வந்திக்கற்கள் போன்ற நூறு நவரத்தினங்கள் அதன் தங்க மேனியில் பதித்திருந்தது போன்ற ஜொலிஜொலிப்பை வெளிப்படுத்தியது.
இந்த மான் உண்மையில் ஒரு மாய மான், அல்லது மாரீசன் எனப்படும் ஒரு இராட்சசன், அதாவது, தனது தங்கை சூர்ப்பனகையின் காதலை மறுத்து இராமன் அவமானப்படுத்தியதற்கு பழிவாங்க இராவணனால் ஏவப்பட்டவன் என்பதாக இந்தக் கதை நீள்கிறது. இலட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கு மற்றும் காதுகளை வெட்டி விரட்டிவிட்டான். காதல் நிராகரிகரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோபம் எத்தகையது என்பது குறித்த மூத்தோர் சொலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
இராமாயணத்தில் இந்த நிகழ்வின் போது, இராமன், இலட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் பஞ்சவதியில் உள்ள காட்டில் வசித்துவந்தனர். அயோத்தியில் 14 ஆண்டுகள் நுழையக்கூடாது என்பதாலேயே இந்த வனவாசம்.
இருண்ட மற்றும் ஆபத்தான காட்டில், இராமனும் இலட்சுமணனும், வனவிலங்குகள் மற்றும் காட்டில் உலவிய தீய சக்திகள் மற்றும் துர் தேவதைகளிடமிருந்து சீதை பாதுகாப்பாக தங்கியிருக்க ஒரு சிறிய ஆனால் ரம்மியமான ஆசிரமத்தை கட்டினர்.
இராமன் மற்றும் இலட்சுமணன் கவனத்தை வேறு திசையில் திருப்பி, அந்த சமயத்தில், உதவ ஆளின்றி இருக்கும் சீதையை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இலங்கை பேரரசிற்கு கடத்திச் செல்லும் திட்டத்துடன் இராவணனால் மாரிசன் ஏவப்பட்டிருந்தான்.
எனவே மாரீசன் ஓர் அழகிய பொன் மானாக உருமாறி, சீதையின் பார்வையில் படுமாறு, இராமரின் ஆசிரமத்திற்கு அருகில் மேயத் தொடங்கினான்.
சூரியனின் பிரதிபலிப்பு போன்று தகதகத்த அந்த தங்க மானைப் பார்த்த கணமே, சீதை தனது கணவர் மற்றும் மைத்துனரிடம் அந்த மானை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டுவரும்படி கோரிக்கை விடுத்தாள். சீதை தனது கணவன் இராமனிடம் தங்க மான் உயிருடன் பிடிபட்டால், அதை செல்லப்பிராணியாக அயோத்தி எடுத்துச் செல்லலாம், இறந்துவிட்டால், அதன் தோல் மீது அமர்ந்து ஆட்சிபுரியலாம் என்று கூறியதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
மாரீசன் மானை போன்று குதியாட்டம் போட்டு ஆசிரமத்தைவிட்டு தூரமாக துள்ளியோட, இராமனும் விடாமல் துரத்திச் சென்றான். கடைசியில், ஒரு தங்க அம்பை மாரீசன் மீது எய்தான். மரணத்தருவாயில் மாரீசன், இராமனின் குரலில், ஓ சீதா! ஓ இலட்சுமணா! என்று மரண ஓலமிட்டான்.
இந்த சூழ்ச்சியினை அறியாமல், திடுக்கிட்ட சீதை, இலட்சுமணரை கூப்பிட்டு உடனே இராமரை தேடி கண்டுபிடிக்குமாறு கூறினாள். பாதுகாக்க யாருமின்றி இருந்த சீதையை ஆண்டி வேடத்தில் நெருங்கிய இராவணன் கடத்திவிட, மனைவியை மீட்கவும், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டவும் தொடங்கியது இராமனின் போர்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல; ஆனால், இந்த மினுமினுப்பிற்கு மனதைப் பறிகொடுக்காமலிருக்க யாரால் தான் முடியும்?