Published: 20 பிப் 2018
பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்கு

பழங்காலத்திலிருந்து, கடன் பெறுவதற்கு கடன் அளிப்பவர்களிடம் தங்கம் அடமானமாக வைக்கப்பட்டு வருகிறது. நீங்கள் ஈடாக எதையும் வைக்காமல் பணம் கடனாகப் பெறமுடியாது. பெரும்பலான வர்த்தகங்கள், சொத்து அல்லது நிலத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்குகின்றன. எனினும், சிறு வணிகர்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் என வரும்போது பெரும்பாலும் அவர்கள் குடும்ப நகையை அடமானம் வைத்து தான் கடன் வாங்குகிறார்கள்.
பண்டைய இந்தியாவில் தங்கம் முக்கியமாக ரோமாபுரிப் பேரரசிலிருந்து வந்தது. ஆடம்பரத்திற்காக ரோமானியர்களால் செலவுசெய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி அரேபியாவில் தங்கிவிட்டது, மீதமுள்ளது இந்தியாவுக்கு வந்தது. ரோமானியர்கள் காலத்தில், பெருமளவிலான தங்கம் இந்தியாவுக்கு எடுத்துவரப்பட்டது, இது 2000 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. பண்டைய இந்தியாவில் ஹுண்டி முறை பின்பற்றப்பட்டது. அது ஒரு வகையான கடன் பத்திரம், இது வர்த்தகப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. இது கடன் தருவதற்கான தகுதியையும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது. நம்பிக்கையைப் பெறுவதற்கு நிலத்தைத் தவிர உங்களிடம் போதுமான அளவு தங்கம் இருக்கவேண்டும், அப்போதுதான் தொலைதூர நாடுகளில் உங்கள் ஹுண்டி ஏற்றுக்கொள்ளப்படும்.
சமீப காலம் வரை, தங்கம் இல்லாமல் எந்த வர்த்தகமும் இருக்காது என்ற விதி பின்பற்றப்பட்டு வந்தது. இன்றும் கூட நீங்கள் கடன் வாங்க விரும்பினால், உங்கள் தங்கத்தை வங்கியில் அல்லது NBFCகளில் (வங்கி சார நிதி நிறுவனங்கள்) டெப்பாசிட் செய்தால் போதும்.
தொடக்கத்தில், உலகளாவிய வங்கி அமைப்பு தங்கத்தை மட்டுமே டெப்பாசிட்டாக அங்கீகரித்திருந்தது. தங்கத்தின் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்குவதன் மூலம் ரூபாய் நோட்டுகளை வழங்கத் தொடங்கின. நம்முடைய ரூபாய் நோட்டில் "இதை அளிப்பவருக்கு ...... தொகையை அளிக்க நான் உறுதியளிக்கிறேன்" எனும் வார்த்தைகள், நம்முடைய ரூபாய் நோட்டுகள் தங்க டெப்பாசிட்டுகளைக் குறிக்கும் காலத்திலிருந்து இருந்துவருகிறது. அப்போதெல்லாம் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை அதன் மதிப்புக்கு இணையான தங்கமாக மாற்றிக்கொள்ளலாம். எனினும், இன்று இந்த வார்த்தைகளின் பொருள் மாறிவிட்டது. இப்போது ரூபாய் நோட்டுகள் குறிப்பிட்டத் தொகைக்கான சட்டபூர்வமான ஒப்பந்தம் என்று பொருள்படும்.
தங்கத்தை தரநிலையாகப் பயன்படுத்துவது நிக்ஸனால் 1971-ல் நிராகரிக்கப்பட்டாலும் கூட, இந்திய ரிசர்வ் வங்கி உட்பட உலகெங்கிலும் உள்ள வங்கி அமைப்புகள், உள்நாட்டில் பணப்புழக்கத்தை உறுதிசெய்வதற்கு தங்கத்தை இருப்பு வைத்திருக்கின்றன.
1991ல், அதிகபட்ச பணவீக்கங்களில் ஒன்றைச் சந்தித்தது. தங்கம் நிரப்பப்பட்ட விமானம் இங்கிலாந்து வங்கி ஒன்றுக்கு பறந்தது. அசலான தங்கம் இல்லையென்றால், இந்தியாவுக்கு கடன் தருவதற்கு ஐஎம்எஃப் (IMF) மறுத்துவிட்டது.
அரசின் மீதான நம்பிக்கை இருக்கும் வரை, அச்சிடப்பட்ட அந்த துண்டுப் பேப்பருக்கு மதிப்பு இருக்கும். எனினும், அரசுகள் மாறினாலும் தங்கம் தன்னுடைய மதிப்பை தக்கவைத்துக் கொள்கிறது. கடன் வாங்குவதும் முதலீடு செய்வதும் இந்த மஞ்சள் உலோகத்தின் உதவியுடன் நடக்கிறது. எளிதில் மாற்றக்கூடிய தன்மையுள்ள அதனுடைய மதிப்பு அதன் சந்தை விலைக்கு நிகரானது. உலகெங்கிலும் இதற்கு ஒரே விலைதான் மேலும் அதனுடைய மதிப்பை இழக்காமல் அதை வேறு எந்தப் பொருளாகவும் மாற்றிக்கொள்ளலாம்.