Published: 27 செப் 2017
தங்கச் சுரங்க தொழில்நுட்பங்களின் கதை
பண்டைய உலகில் தங்கம் எப்படி தோண்டு எடுக்கப்பட்டது என்று ஆச்சரியமாக உள்ளதா? தங்க இருப்புகளானது பொதுவாக இரண்டு வடிவங்களில் இருக்கிறது: பாறைப் படிமங்கள் மற்றும் ஆற்றுப்படுகை படிமங்கள். தங்கத்தின் பாறைப் படிமங்கள், தாதுப் பாறைகளில் பதிந்திருக்கின்றன, அவை உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தங்கமாகப் பெறப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக உள்ள சீதோஷ்ண நிலைகளின் காரணமாக, பாறைப் படிமங்கள் அல்லது பவளப் பாறைப் படிமங்கள் ஆகியவை அரிக்கப்பட்டு, அதில் உள்ள தங்கம் போன்ற கனமான கூறுகளானது ஆறுகளால் அடித்துக்கொண்டு வரப்பட்டு, ஆற்றுப்படுகை படிமங்களாக ஆகிறது (இது வண்டல் தங்கம் என்றும் அழைக்கப்படுகின்றன).
கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகியோர் பண்டையக் காலங்களில் வண்டல் மற்றும் பவளப் பாறை தங்கம் ஆகிய இரண்டையும் வெட்டியெடுத்தனர். முதன்முதலாக, கி.மு.7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆற்றுப்படுகை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆசியா மைனரின் நதிகளால் மவுண்ட் ட்மோலஸில் இருந்து தங்கம் இருந்த தாதுக்கள் கொண்டு வரப்பட்டன. இந்த 'வெள்ளைத் தங்கத்தை' தயாரிக்க எந்தவித சிக்கலான செயலாக்க முறையும் தேவைப்படவில்லை – இதில் மூன்றில் இரண்டு பங்கு தங்கமும், ஒரு பங்கு வெள்ளியும் இருந்தது.
கி.மு. முதல் நூற்றாண்டு காலத்தில், கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்களால் உலைகளைப் பயன்படுத்திய தாது-செயலாக்கம் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்கள் இருந்துள்ளன. தங்கத்தை உற்பத்தி செய்த அந்த பண்டைய நுட்பங்களைப் பரிசோதித்த பொறியியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பரிசோதனைகளில் 93.5 சதவிகித தூய்மையான தங்கம் கிடைத்தது.
நவீன காலங்களில், மேற்பரப்பிற்கு அருகே தங்கம் அமைந்திருக்கும்போது திறந்த குழி போன்ற சுரங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒரு திறந்த குழியானது, பொருளாதார ரீதியில் சாத்தியமுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது. தரையில் ஒரு பெரிய குழி தோண்டப்பட்டு, இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்காகவும், சுரங்கத்தில் இருந்து தாதுக்களை வெளியே எடுத்து வருவதற்காகவும் குழிகளைச் சுற்றிலும் மற்றும் சுரங்கத்தின் மேல் பகுதி வரையிலும் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பெரும்பாலான சுரங்கங்களில் இருப்பது போல் தங்கம் மிகவும் ஆழத்தில் இருக்கும் பொழுது, குகைகள் தோண்டியெடுக்கப்பட்டு, அவை பாறைப் படிமங்களுடன் கிளைகளாக இணைக்கப்படுகின்றன. சுரங்கத்தில் அகழும் செயல்முறை நேரானதாக இருந்தாலும், வெடிபொருட்களைக் கொண்டு துளையிடுதல், அந்த வெடிப்பொருட்களை அமைத்தல், பின்னர் வெடித்து எஞ்சியிருக்கும் கழிவுகளை வெளியே எடுத்தல் போன்ற தொழில்நுட்பமும், மிகுதியான கடின உழைப்பும் உள்ளன. தாது பின்னர் செயலாக்கம் செய்யப்பட்டு, தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது.
தங்கத்தை அகழும் மற்றும் பிரித்தெடுக்கும் முறைகள் வேகமாக மாறிவிட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட இயந்திரங்கள், அதிக துல்லியத்துடன் தோண்டுகின்றன. அவற்றால் சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவே தீங்கே உண்டாகிறது. அசாதாரண நிலத்தடி ஆழங்களில் அதிக விரிவான பகுதிகளிலும், அதிக அளவிலான தங்கத்தை தோண்டியெடுப்பதற்கான சிறந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உபகரணங்கள் மற்றும் கருவிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் தானியங்கி ரோபோக்கள் உள்ளடக்கியவை ஆகும்.
வடமேற்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் ஒரு செலவு குறைவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற முறையைப் பரிசோதனை செய்துள்ளனர், அவர்கள் மூலப்பொருட்களிலிருந்து தங்கத்தை தனிமைப்படுத்துவதற்கு, சயனைடுக்குப் பதிலாக சாதாரண சோள மாவைப் பயன்படுத்தினார்கள். சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கு சுரங்கத் தொழிலில் இப்பொழுது முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது.