Published: 04 நவ 2021
தங்க நகைகளை உங்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அணிவது
பெரும்பாலான பெண்களுக்கு தங்க நகைகளின் மதிப்பு என்பது அதன் பண மதிப்பை விட மேலானதாகும். பாரம்பரிய அர்த்தத்தில் பார்த்தால், இது ஒரு உணர்வு, இது பெரும்பாலும் தலைமுறை தலைமுறைகளாக குடும்ப உறுப்பினர்களிடையே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நவீன கால பெண்ணைப் பொறுத்தவரை, தங்கம் ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வாகவும், மற்றவர்களை கவரும் ஒரு ஸ்டைல் அடையாளமாகவும் இருக்கிறது.
இருப்பினும், உங்கள் தங்க நகைகள் அது போன்ற தாக்கத்தை ஏற்படுத்த, நீங்கள் அதை சரியாக அணிய வேண்டும். சந்தையில் கிடைக்கும் பல டிசைன்களுடன், ஒவ்வொரு நிகழ்விற்கும் நீங்கள் ஒரு ஸ்டைலைக் காணலாம். உங்கள் தங்க நகைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் இங்கே.
உங்கள் உடையின் வண்ணத்தை கருத்தில் கொள்ளுங்கள்
Jewellery Credits: Signature jewellery by Poonam Soni
தங்க நகைகள் உங்கள் அலங்காரத்துடன் ஒத்துப்போவதை உறுதி செய்ய, அது வெவ்வேறு வண்ணங்களுடன் எவ்வாறு ஜோடி சேர்கிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். அனைத்து வகையான தங்கங்களும் (மஞ்சள் தங்கம், வெள்ளை தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட்) கருப்பு போன்ற பொதுவான நிறத்துடன் நன்றாக ஒத்துப் போகலாம், ஆனால் அவை மற்ற வண்ணங்களுடன் அவ்வளவு நன்றாக இருக்காது. நடுநிலை, பேஸ்ட்டல் மற்றும் பளிச்சென்ற வண்ணங்கள் கொண்ட ஆடைகளுடன் எந்த வகையான தங்க நகைகள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதற்கான ஒரு பார்வை இங்கே.
- நடுநிலை வண்ணங்கள் - சாம்பல், வெள்ளை, பேஜ் அல்லது நேவி போன்ற அடர் வண்ணங்கள் கூட ரோஸ் கோல்ட் அல்லது வெள்ளை தங்க நகைகளுடன் சிறந்த முறையில் ஒத்துப்போகின்றன. உதாரணமாக, நீங்கள் ஒரு பேஜ் வண்ண ஆஃப்-ஷோல்டர் அணிய விரும்பினால், உங்கள் தோள்கள் மற்றும் கழுத்து எலும்பின் கவனத்தை ஈர்க்க ரோஸ் கோல்ட் பதக்கத்துடன் அதை அணியலாம். ஒரு சாம்பல் அல்லது வெள்ளை பாடி கான் ஆடை, ரோஸ் கோல்ட் மற்றும் வைரக் கம்மல்கள் (பகல் தோற்றத்திற்கு) அல்லது வெள்ளை தங்க ஷோல்டர் டஸ்டர்களுடன் (இரவு தோற்றத்திற்கு) நன்றாக இணையும்.
- பேஸ்ட்டல் வண்ணங்கள் - பளிச்சென்று இருக்கும் மஞ்சள் தங்கம், அடக்கமான மற்றும் மென்மையான பேஸ்ட்டல் வண்ணங்களுடன் நன்கு பொருந்தும். வெளிர் இளஞ்சிவப்பு, லாவெண்டர், ஆகாய நீலம் அல்லது எலுமிச்சை மஞ்சள் நிற ஆடைகளுடன் தங்க வளைய காதணிகள் அல்லது பருமனான தங்கச் சங்கிலியை இணைப்பது நிச்சயமாக நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும். உண்மையில், சில நவீன கால மணப்பெண்கள் பாரம்பரிய சிவப்பு மற்றும் மெரூன்களை விட வெளிர் வண்ணங்களை அதிகம் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இந்த வண்ணங்கள் பாரம்பரிய மஞ்சள் தங்க நகைகளுடன் நன்றாக ஒத்துப்போகின்றன.
- பளிச் வண்ணங்கள் - பிரிக் ரெட், அடர் பச்சை அல்லது ஃப்யூஷா இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் ஹால்டர் அல்லது ஷீத் வகை உடை போன்ற பளிச்சென்ற ஸ்டைல் முறையை வெளிப்படுத்த சில நிகழ்வுகள் உங்களை ஊக்குவிக்கலாம். வெள்ளை மற்றும் மஞ்சள் தங்கம் அத்தகைய ஆடைகளுடன் நன்றாக இருக்கும், இருப்பினும் உங்கள் தோற்றத்திற்கு ஒரு மாற்றத்தைச் சேர்க்க முயற்சிக்கவும். உதாரணமாக, ஒரு எளிய பிரேஸ்லெட்டுக்கு பதிலாக, உங்கள் ஆடைக்கு பொருந்தக்கூடிய ரத்தினக் கற்களைக் கொண்ட ஒரு தடிமனான பிரேஸ்லெட்டை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு மாற்றாக, தோற்றத்தை புதுமையாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க நீங்கள் ஒரு பகல் -இரவு தோற்றத்திற்கான ஒரு கிளாசிக் டென்னிஸ் பிரேஸ்லெட் அணியலாம்.
உங்கள் சருமத்தின் நிறத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்
உங்கள் தோற்றத்திற்கு பொருந்தக்கூடிய தங்க நகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் சருமத்தின் நிறமும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சமாகும். சரும நிறங்களை பொதுவாக மூன்று வகைகளின் கீழ் வகைப்படுத்தலாம் - வெதுவெதுப்பான நிறம், நடுநிலையான நிறம் மற்றும் குளிர்ந்த நிறம். உங்கள் சருமத்தின் நிற அடிப்படையில் தங்க நகைகளை வாங்க உதவும் ஒரு வழிகாட்டி இங்கே.
- வெதுவெதுப்பான நிறம் கொண்ட சருமம் – நீங்கள் வெதுவெதுப்பான நிற சருமம் கொண்டிருந்தால் நீங்கள் வெயிலில் எளிதாக பாதிக்கப்படுவீர்கள் மற்றும் உங்கள் சருமத்தில் பச்சை அல்லது ஆலிவ் நிற நரம்புகள் இருக்கும். உங்கள் சரும நிறத்திற்கு மஞ்சள் தங்க நகைகள் சரியான பொருத்தமாக இருக்கும். உங்கள் நிறத்தை வெளிக்காட்ட குந்தன் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய தங்க சோக்கர் நகையை ஒரு லெஹெங்காவுடன் இணைத்து ஒரு திருமணத்தில் பங்கு கொள்ளலாம்.
- குளிர்ந்த நிறமுடைய சருமம் – உங்களுக்கு குளிர்ச்சியான சரும நிறம் இருந்தால், வெயிலில் உங்கள் சருமம் சிவப்பாக மாறும் அல்லது எளிதில் நிறம் மாறும் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம், மேலும் உங்கள் நரம்புகள் நீலம் அல்லது ஊதா நிறத்தில் தெரியலாம். இந்த வகை சரும நிறத்திற்கு வெள்ளை தங்க நகைகள் பொருத்தமாக இருக்கும். பளபளப்பான, தொழில்முறை தோற்றத்திற்காக மேற்கத்திய ஃபார்மல் உடையுடன் வைரம் பதித்த வெள்ளை தங்கக் காதணிகளை ஜோடி சேர்க்கலாம்.
- நடுநிலை நிறமுடைய சருமம் – உங்கள் நரம்புகள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியாவிட்டால், நீங்கள் ஒரு நடுநிலை-நிற சருமத்தை பெற்றிருக்கலாம். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் எல்லா வகை நிறமுள்ள தங்க நகைகளும், ரோஸ் கோல்ட் உட்பட அனைத்தும் உங்களுக்கு பொருந்தும். எந்த வண்ணமும் கொண்ட ஒரு எளிய தங்க பதக்க செட் ஒரு சாதாரண தோற்றத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
உங்களின் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் நிகழ்வை கருத்தில் கொள்ளுங்கள்
நீங்கள் அணியும் நகைகள் அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் அலுவலகத்திற்கோ அல்லது ஒரு தொழில்முறை நிகழ்வுகளுக்கோ நீங்கள் தங்க நகைகளை அணிந்து செல்வதாக இருந்தால், குறைந்தபட்ச, ஆடம்பரமில்லாத நகைகளுடன் செல்வது புத்திசாலித்தனமாக இருகும். உதாரணமாக, உங்கள் சூட் உடைக்கு பொருத்தமாக ஒரு சிறிய ஜோடி வைரம் பதிக்கப்பட்ட தங்க காதணிகள் மற்றும் ஒரு மெல்லிய பிரேஸ்லெட்டை அணியலாம்.
அதே போன்று சாதாரண அல்லது ஆடம்பர விருந்து மற்றும் நிகழ்வுகளுக்கு செல்லும்போது தனித்து தெரியக்கூடிய தடிமனான தங்க நகைகளை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு காக்டெய்ல் உடை அணிந்திருந்தால், உங்களுக்கு தேவையானதெல்லாம் பெரிய காதணிகளும், ஒரு மோதிரமும், இது அனைவரையும் உங்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
தங்க நகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் உடல் வடிவத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் சில டிசைன்கள் ஒரு குறிப்பிட்ட உடல் அம்சங்களுக்கு மற்றவைகளை விட சிறப்பாகப் பொருந்துகின்றன. உதாரணமாக, நீங்கள் சிறிய உடலமைப்பு கொண்டவராக இருந்தால், பதகத்துடன் கூடிய எளிமையான தங்கச் சங்கிலி மற்றும் காதணி அல்லது சிறிய வளைய காதணிகள் சிறந்ததாக இருக்கும், அதே நேரத்தில் தடிமனான நகைகள் மற்றும் தடித்த வளையல்களும் நன்கு பொருந்தும். மாறாக, நீங்கள் பரந்த தோள்கள் உடையவராக இருந்தால், பெரிய நெக் பீஸ் மற்றும் பெரிய பதக்கங்கள் அணிவதைத் தவிர்க்கவும். தொங்கும் காதணிகள் மற்றும் நீண்ட நெக்லஸ்கள் ஒரு நீளமான தோற்றத்தை சேர்க்கின்றன, இது வளைந்த அல்லது வட்டவடிவ உடல் அம்சங்களுக்கு ஏற்றது.
இறுதியாக, உங்கள் உடல் வடிவம் மற்றும் ஸ்டைலுக்கு எது பொருத்தமானது என்பதை அறிய உங்கள் நேரத்தை செலவிட்டு வெவ்வேறு ஸ்டைல்களில் பரிசோதனை செய்து பாருங்கள்.
உங்கள் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும், உங்கள் விருப்பத்திற்கு மட்டுமல்ல, உங்கள் உடை அலங்காரத்திற்கும் பொருத்தமான சரியான அணிகலன்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். ஒரு சிறிய ஆய்வின் மூலம், உங்கள் அலங்காரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் மற்றும் உங்கள் தோற்றத்திற்கு சிறிது மிடுக்கைச் சேர்க்கும் தங்க அணிகலன்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.