Published: 04 செப் 2017
பணமதிப்பு நீக்கம் மற்றும் தங்கம்
2016-ல் இந்தியா எதிர்கொண்ட பல சவால்களில், தங்கக் காளை சந்தை என்பது மிகப்பெரிய ஒன்றாக இருந்தது. 2016ஆம் ஆண்டின் பட்ஜெட்டின் நகைகளின்மீது கலால் வரி விதிக்கப்பட்டதால், முதல் காலாண்டில் வர்த்தக நிலைமைகள் சீர்குலைந்தது. அது தவிர, பணமதிப்பு நீக்கம் என்ற கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பயன்படுத்தப்படுவதை நிறுத்த நரேந்திர மோடி அரசு முடிவு செய்தது. "கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துதல், சட்டவிரோத நடவடிக்கை மற்றும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு கள்ளப் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல்" ஆகியவை பணமதிப்பு நீக்கத்திற்கு காரணம் என்று ஒரு முன்னணி பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த விலைமதிப்புள்ள உலோகமான தங்கத்தை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. நாட்டிலுள்ள அனைத்து மூலைகளிலிருந்தும், தங்களுடைய பழைய பணங்களை தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மக்கள் விரைந்தனர். விற்பனையாளர்களும் இந்த விற்பனை அதிகரிப்பைப் பயன்படுத்திக்கொண்டு, விலைகளை உயர்த்தினார்கள். இது திடீரென தங்கத்தின் விலையை 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியது.
எனினும், அடுத்து வந்த வாரங்களில் நிலைமை மாறிவிட்டது. தங்க விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது. கறுப்புப் பணத்தின் மீதான அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை காரணமாக, தங்கம் வைத்திருப்பதிலும் மற்றும் தங்கம் வாங்குவதிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் வாங்குபவர்கள், புதிதாக தங்கம் வாங்குவதில் எச்சரிக்கையாக இருந்தனர் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. இந்தியாவின் தங்க சந்தை - பரிணாமம் மற்றும் புத்தாக்கம் என்ற அவர்களின் அறிக்கையில், உலக தங்க கவுன்சில் பின்வருமாறு கூறியது: நகைக்கடைக்காரர்கள் பழைய தேதியில் விற்பனை செய்ததாக கணக்குக் காட்டி பிடிபட்டதால் அல்லது பழைய பணத்தை மாற்றுவது நகை விற்பனை செய்ததாக போலியாக ஆவணங்கள் உருவாக்கியதால், உண்மையாக தங்க நகை வாங்குவோர் கூட தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டினர்.
2016ஆம் ஆண்டின் இறுதி நெருங்கும்பொழுது, திருமண காலமாக இருக்கும் என்பதால் பொதுவாக தங்க விற்பனையானது பெருமளவில் அதிகரித்து இருக்கும், ஆனால் வழக்கமாக இருக்கும் அதிக கூட்டம் இப்பொழுது வரவில்லை என்பதால் வர்த்தகர்கள் கவலையடைந்தனர்.
ஆறு மாதங்கள் கழித்துப் பார்க்கும்பொழுது, தங்கத்தின் விற்பனை நிலையாகி உள்ளதாகத் தெரிகிறது. சந்தையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க எதிர்காலத்தில் கொள்கை நடவடிக்கைகளை அமல்படுத்த அரசாங்கம் நம்புவதாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான விசேஷங்கள் உள்ள நமது நாட்டில் தங்கம் என்பது ஒரு விருப்பமான உலோகமாக தொடர்ந்து இருக்கும்.
தங்கத்தின் மீதான இந்தியாவின் காதல் எளிதில் மாறாது.