Published: 20 பிப் 2018
பிரகாசமாக ஒளிர்கிறது: தங்க நகையும் 21 ஆம் நூற்றாண்டு இந்தியர்களும்
பூனேவைச் சேர்ந்த 30 வயதான ரிச்சா சிங், தங்கம் வாங்குவதென்று வரும்போது 'முதலீடு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். அவரைப் பொருத்தவரை, நகை என்பது அணிவதற்காக வாங்குவதே அன்றி லாக்கரிலோ அல்லது பீரோவிலோ பூட்டி வைப்பதற்கு அல்ல. "நான் கனமான நகைகளை வாங்குவதில்லை. அவற்றை தவிர்த்துவிடுவேன்," எனக் கூறுகிறார். இவர் மட்டும் அப்படிக் கூறவில்லை. 21 ஆம் நூற்றாண்டு இந்தியர்கள் குறிப்பாக நகர்ப்புறத்தில் வாழும் வேலைக்குச் செல்லும் 30 வயதுக்குட்பட்ட பெண்களின் ரசனைக்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் தொடர்ந்து மாறிவருவதை, முன்னதாக இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கை உறுதிசெய்கிறது. எப்படிப் பார்த்தாலும், தங்க நகையை தங்கள் அம்மாக்கள் பார்த்த கோணத்தில் இந்தத் தலைமுறையினர் பார்ப்பதில்லை. இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை, பெண்கள் நகைகளை நிதிப் பாதுகாப்புக்காகவும் அழகூட்டும் பொருளாகவும் மதித்து வாங்கினார்கள். இன்றைய நகரப் பெண்கள் தங்கத்தை தங்களின் சுய அழகுக்கானதாகவே பார்க்கிறார்கள். "மிகவும் பளிச்சென்று இல்லாமல் நேர்த்தியாக இருந்தால் நான் தங்கநகையை அணிவேன்" எனக் கூறுகிறார் ஊடகவியலாளராக இருக்கும் 29 வயதான ரெம்யா ஃபிலிப்ஸ். மும்பையில் போட்கேஸ்ட் தயாரிப்பாளராக உள்ள 28 வயதான சரண்யா சுப்ரமணியத்திடம் பரிசாக வந்த சில நகைகள் உள்ளன, ஆனால் வாங்குவது என்று வரும்போது அவரும் ரெம்யா போலவே மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார்.
ஆனால், திருமணமாகாத பெண்கள் தான் மெல்லிய எடைகுறைவான நகைகளை விரும்பினாலும், நானும் அப்படிதான் என்று கூறும் வாடிக்கையாளர்களும் பல்வேறு பிரிவுகளிலும் உள்ளனர். நாடு முழுவதும் பல இடங்களிலும், எல்லா மதங்களிலும் நடக்கும் ஆடம்பரமான இந்தியத் திருமணங்களில் மிக அதிகமான செலவுகளில் தங்கம் வாங்குவது ஒன்று. கட்டிடக்கலை நிபுணராக உள்ள பூனேவைச் சேர்ந்த ஷிவானி சத்பதி ஓபராய், 2103-ல் தன்னுடயை திருமணத்தைத் திட்டமிடும்போது பல விற்பனையாளர்களிடம் தன் தொடர்பு எண்ணை அளித்திருந்தார், அப்போதிருந்து இது தொடர்கிறது. "அவர்கள் தள்ளுபடி அல்லது விழாக்கால சலுகைகள் அளிக்கும்போதெல்லாம் எனக்கு குறுஞ்செய்தி வரும், நான் விரும்புகிற அல்லது அணிய ஆசைப்படுகிற சில குறிப்பிட்ட நகைகளை வாங்குவது சிறந்தது என அப்போதுதான் முடிவு செய்தேன்" எனக் கூறுகிறார் அவர். "நீங்கள் சில நேரங்களில் அதுவும் குறிப்பாக மதம், கலாச்சாரம் சார்ந்த அல்லது குடும்ப நிகழ்வுகளில் பாரம்பரியமான தங்க நகைகளை அணிய வேண்டியிருக்கலாம் மேலும் நீங்கள் விரும்புவதையும் அணியலாம்" என்பதை ஏற்றுக்கொள்வதே திருமண வாழ்க்கையில் ஓர் அங்கம் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். இந்திய உயர் குடும்பங்களில் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு இது மிக முக்கிய காரணமாக இருக்கவேண்டும். அது செல்வத்துக்கும், தகுதி நிலைக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது மேலும் சமூக நோக்கில் கூறுவதென்றால் தங்கத்தை அணியும் பெண்கள் குடும்பத்தின் நிலையை சுட்டிக்காட்டுபவர்களாக இருக்கிறார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் கூறும்போது திருமணமாகாத பெண்கள் வேண்டுமானால் மெல்லிய எடைக் குறைவான நகைகளை அணிந்துகொள்ளலாம். திருமணமான பெண்ணாக ஒருவர், வேலைப்பாடுகள் நிறைந்த கற்கள் பதித்த கவர்ச்சிகரமான நெக்லஸுக்கே முன்னுரிமை அளிக்கிறார்.
இதில் ஆர்வத்தைத் தூண்டுவது என்னவென்றால், ஷிவானி தன்னைப் புதியதை வாங்குபவர் என்தைக் காட்டிலும் அதிகமாக பழையதைக் கொடுத்து புதியதை வாங்குபவராகவேப் பார்க்கிறார். அவருடைய அம்மா ஒரு நெக்லஸை பரிசாக அளித்ததை நினைவு கூறுகிறார். "நான் பொற்கொல்லரிடம் சென்று அதைக் கொடுத்து நான் விரும்பிய நகையை மாற்றிக் கொண்டேன்." எந்த வருத்தமும் இல்லை. "அந்தப் புதிய நெக்லஸை என்னுடைய அம்மாவிடம் காட்டி இதை உன்னுடைய பரிசாகப் பார்க்கிறேன் என அவரிடம் கூறினேன். பரிசளித்த உணர்வு அப்படியே இருந்தது," எனப் புன்னகையுடன் கூறுகிறார். தலைமுறைகளுக்கிடையே விருப்பங்கள் மாறியிருக்கலாம், ஆனால் தங்கத்தின் (மற்றும் பரிசுகள்) மீதான காதல் புத்துணர்வுடன் நீடித்திருக்கிறது.