Published: 20 பிப் 2018
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தென்னிந்திய மணப்பெண்கள்
இந்தியர்களைப் பொறுத்தவரையில், திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை நிகழ்வது. திருமணத்தை நினைவில் நிற்கக்கூடிய ஒன்றாக ஆக்குவதற்கான யோசனைகளில் ஒன்று அதைப் பகட்டாகவும், ஆடம்பரமாகவும் செய்வது. அவர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்புகளைச் செலவிடுகிறார்கள், உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்குகிறார்கள், தங்கள் சொத்துக்களை விற்கிறார்கள் மேலும் கிட்டத்தட்ட கடனில் மூழ்குகிறார்கள். எனவே, "காதல், போர் மற்றும் திருமணத்தில் அனைத்தும் நியாயமானதே" எனக் கூறுவதும் தவறாகாது.
உலகில் மிகப்பெரிய அளவில் தங்கம் வாங்கும் நுகர்வோர்களில் இந்தியர்களும் அடங்குவர். செல்வச் செழிப்புள்ள குடும்பங்கள் தங்கள் இல்லத் திருமணத்தில் மிக அதிக அளவு நகைகள் மீது செலவு செய்வதைப் பார்க்கலாம். தங்கத்தின் மீதான இந்த மோகம் தென்னிந்தியாவில் தெள்ளத்தெளிவாக உள்ளது. நீங்கள் ஏதேனும் ஒரு தென்னிந்திய திருமணத்தில் கலந்துகொண்டிருந்தால், மணப்பெண் எப்படி தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டிருப்பார் என உங்களுக்குத் தெரியவரும். இந்த ஜொலிக்கும் உலோகத்தின் மீதான பற்றுதலைத் தவிர, எளிதில் பணமாக்கும் இதன் தன்மை காரணமாக நிதிப் பிரச்சனைகள் ஏற்படும்போது இது சிறந்த பாதுகாப்பாக விளங்குகிறது. பாரம்பரியமாக இந்து மதத்தில் தங்கம் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியின் அடையாளமாகும், எனவே இது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் தங்கத் தேவையை பற்றிய மேலோட்டமான பார்வையைப் பெறுவதற்கு உலகத் தங்கக் கவுன்சில் சில கணக்கீடுகளைச் செய்தது. கேரளாவின் மணப்பெண்கள் அதிக அளவில் - 320 கிராம் அல்லது 40 சவரன் தங்கத்தை அணிகிறார்கள் என. அதனுடைய 'இந்தியாவின் தங்க சந்தை: இனோவேஷன் மற்றும் எவல்யூஷன் அறிக்கை' கூறுகிறது. அதே நேரத்தில், அதற்கடுத்த இடத்தில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு மணப்பெண்கள் சாரசரியாக 300 கிராம் தங்கத்தை அணிகிறார்கள்.
18-33 வயதுள்ள இந்தியர்களில் பதிலளித்த மூன்றில் ஒரு பங்கினர், அவர்களிடம் ஐம்பது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தங்கத்தில் முதலீடு செய்வோம் எனக்கூறினர் என்று அறிக்கை கூறுகிறது. இது தங்கத்தின் மீதான நமது எல்லையற்ற ஆர்வத்தைக் எடுத்துக்காட்டுகிறது. ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கொச்சினை முக்கிய மையமாகக் கொண்ட தென்னிந்தியா கிட்டத்தட்ட 40% தங்கத்தைப் வாங்குகிறது. அஹமதாபாத் மற்றும் மும்பையை முக்கிய மையமாகக் கொண்ட மேற்கு இந்தியா 25% தங்கத்தை வாங்குகிறது. நியு தில்லி மற்றும் ஜெய்பூரை முக்கிய மையமாகக் கொண்ட வட இந்தியா 20% தங்கத்தை வாங்குகிறது. 15% தங்கத்தை வாங்கும் கிழக்கு இந்தியாவின் முக்கிய மையம் கொல்கத்தா.
தங்கம் இல்லாமல் எந்த ஒரு பகட்டான ஆடம்பரமான திருமணமும் முழுமை அடைவதில்லை.