Published: 20 பிப் 2018
ராஜா துஷ்யந்தாவின் தங்க மோதிரம்
“அவர்கள் எல்லோரையும் ஆள்வதற்கு ஒரு மோதிரம், அவர்களைக் கண்டறிவதற்கு ஒரு மோதிரம், அவர்களைக் கொண்டுவந்து இருளில் கட்டிவைப்பதற்கு ஒரு மோதிரம்” என்ற இந்த மேற்கோளை டோல்கியன் ரசிகர்கள் யாவராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இங்கே இந்தியாவில், காதலர்களை மீண்டும் ஒன்று சேர்த்த மோதிரம் பற்றிய மற்றொரு கதை சொல்லப்படுகிறது.
ஒரு காலத்தில் சகுந்தலா என்ற பெயருடைய அழகிய பெண் வாழ்ந்து வந்தாள், அவள் காட்டில் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த கன்வ முனிவரின் வளர்ப்பு மகள். ஒரு நாள், ஹஸ்தினாபுர அரசனான ராஜா துஷ்யந்தன் வேட்டையாடிக் கொண்டிருந்தான், அப்போது சகுந்தலா வளர்த்து வந்த மானின் மீது அம்பெய்திவிட்டான். மான் வலியில் துடித்துக்கொண்டிருந்ததை அவள் பார்த்தாள், அதை ஆசுவாசப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். விலங்குகள் மீதான அவளுடைய பாசம் துஷ்யந்தனின் மனதைத் தொட்டது, அவளிடம் மன்னிப்புக் கோரினான். அவள் அவனை மன்னித்து, காயம்பட்ட மானை குணப்படுத்துவதற்கு தன்னுடன் தங்குமாறு அவனைக் கேட்டுக்கொண்டாள்.
காலப்போக்கில், அவர்கள் காதலில் விழுந்தனர், திருமணம் செய்துகொண்டனர். துஷ்யந்தன் அவனுடைய பெயர் பொறித்த தங்க மோதிரத்தை அவளிடம் கொடுத்து, திரும்பி வந்து சகுந்தலாவை தன்னுடன் அழைத்துச் செல்வதாக வாக்களித்துவிட்டு தன்னுடைய நாட்டுக்குச் சென்றான்.
சிறிது நாட்களுக்குப் பிறகு, துர்வாச முனிவர் சகுந்தலாவை காணவந்திருந்தார். அவர் பலமுறை தண்ணீர் கேட்டும் அதைக் கவனிக்காமல் சகுந்தலா துஷ்யந்தனின் நினைவிலேயே இருந்தாள். முனிவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து, "நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அந்த நபர் உன்னை மறந்துபோகட்டும்" என்று சபித்துவிட்டார்.
இந்த சாபத்தைக் கேட்டு நினைவுலகுக்கு வந்த அவள், முனிவரிடம் மன்னிப்புக் கோரி மன்றாடினாள். அவளுடைய கோரிக்கைக்கு செவிமடுத்து, "சாபத்தை என்னால் திரும்பப் பெறமுடியாது, ஆனால் அதை மாற்றமுடியும்" என்று கூறினார். அவர்கள் இருவருக்கும் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு பொருளை துஷ்யந்தனிடம் காட்டினால், அவனுக்கு அவளுடைய நினைவு வரும் எனத் தெரிவித்தார்.
சாபத்தின் காரணமாக, துஷ்யந்தன் சகுந்தலாவை மறந்துவிட்டான். தலைநகரில் அவனை சந்திக்க முடிவுசெய்தாள், ஆனால் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அவளுடைய தங்க மோதிரம் ஆற்றில் விழுந்துவிட்டது. தங்க மோதிரத்தை ஒரு மீன் விழுங்கிவிட்டது. சகுந்தலா அரண்மணைக்கு வந்தபோது, ராஜாவால் அவளை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
வெட்கித் தலைகுனிந்த அவள், காட்டின் வேறொரு பகுதியில் வாழத் தொடங்கினாள், அங்கே அவளுக்கு பரதன் என்றொரு மகன் பிறந்தான். பரதன் வீரம் செறிந்த சிறுவனாக, காட்டு விலங்குகளிடையே வளர்ந்து வந்தான்.
ஆண்டுகள் உருண்டோடின, துஷ்யந்தனுக்கு ஒருபோதும் சகுந்தலாவின் நினைவு வரவில்லை. ஒருநாள் ஒரு மீனவன் அவனிடம் ஒரு தங்க மோதிரத்தைக் கொண்டுவந்தான். அந்த மோதிரத்தை ஒரு மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்ததாகவும், நேராக உங்களிடம் கொண்டு வருவகிறேன் என்றும் ராஜாவிடம் கூறினான். தங்க மோதிரம் அவனுடைய பார்வையில் பட்டதும் சாபம் விலகியது. ராஜாவுக்கு சகுந்தலாவின் நினைவு திரும்பியது, அளுடைய வீட்டுக்கு விரைந்தான், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விரக்தியில் அரண்மனைக்குத் திரும்பினான்.
மேலும் சில ஆண்டுகள் சென்றன. ராஜா காட்டிற்கு வேட்டையாடச் சென்றான், அங்கே ஒரு சிறுவன் சிங்கக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்தச் சிறுவன் சிங்கக் குட்டியின் வாயைத் திறந்து, "காட்டு ராஜாவே! உன் வாயை அகலமாகத் திற, உன் பற்களை நான் எண்ண வேண்டும்" எனக் கூறினான்.
இது துஷ்யந்தனை வியப்பிலாழ்த்தியது, சிறுவனிடம் அவனுடைய பெற்றோரைப் பற்றி விசாரித்தான். தான் ராஜா துஷ்யந்தன் மற்றும் சகுந்தலாவின் மகன் என்று அந்தச் சிறுவன் பதிலளித்தான். உடனே ராஜா தன்னை அவனுடைய தாயிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டான்.
குடும்பம் ஒன்று சேர்ந்தது, பரதன் மிகச்சிறந்த அரசனாக ஆனான்.