Published: 20 பிப் 2018
வெங்கடேசப் பெருமாளின் தங்கக் கதை
2016 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதல் முறையாக, திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில், பக்தர்கள் அளிக்கும் காணிக்கை வழியாக வந்த மொத்த வருமானம் ரூ.1000 கோடிகளை கடந்துவிட்டது. வெங்கடேச பெருமாள் வீற்றிருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் இந்தக் கோயில் இந்தியாவின் மிகவும் பணக்கார கோயிலாக இருக்கிறது. இதற்குப் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளின் மார்பில் லட்சுமி தேவி இளைப்பாறுவதிலிருந்து இந்தக் கதை தொடங்குகிறது.
தான் வசிக்கும் கணவரின் திருமார்பில் எட்டி உதைத்த பிருகு முனிவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபத்தில் லட்சுமி, சொர்க்கத்திலிருந்து கணவரைப் பிரிந்து பூலோகம் வந்தாள்.
மனைவியை பின்தொடர்ந்து பூலோகம் வந்த விஷ்ணு பகவான், அவரின் கோபம் தணியும் வரை, அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தார். பூலோகத்தில் ஒரு மலையரசனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் லட்சுமி தேவியும், ஸ்ரீனிவாஸ் என்ற பெயரில் விஷ்ணு பகவானும் மறு அவதாரமெடுத்தனர்.
பத்மாவதியை திருமணம் செய்ய ஸ்ரீனிவாஸ் விருப்பம் தெரிவிக்க, அதற்கு பத்மாவதியின் தகப்பனார், ‘பணமில்லாத உன்னை போன்ற ஆண்டிக்கு பெண் தர மாட்டேன்; அவளை திருமணம் செய்ய வேண்டுமானால் எனக்கு வரதட்சணை தர வேண்டும்.” என்று நிபந்தனை விதித்தார். இதனால், செல்வக் கடவுளான குபேரனிடம் பெருமளவில் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி ஸ்ரீனிவாஸுக்கு இருக்கவில்லை. இதையடுத்து, குபேரன் வாக்களித்தபடி, ஸ்ரீனிவாஸுக்கு தங்க மலைகள் கொடுக்கப்பட்டன.
கலியுகத்தின் முடிவில் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதாக குபேரனிடம் ஸ்ரீனிவாஸ் வாக்களித்திருந்தார். இதுநாள் வரையில் அந்த வரதட்சணையே உச்சபட்சமானது என்பதால், ஸ்ரீனிவாஸ் என்கிற வெங்கடேச பெருமாளின் பணப்பெட்டகத்தை நிரப்புவதற்கு அவரது பக்தர்கள் தொடர்ந்து காணிக்கை செலுத்திவருகின்றனர்.
பக்தர்களின் இந்த பரோபகாரத்திற்கு பிரதியுபகாரமாக, பக்தர்களின் செல்வத்தை மேலும் பெருக்கவோ அல்லது செல்வத்தின் மீதான பற்றை விலக்கவோ அருள்புரிகின்றார்.
எனவே பக்தர்கள் விஷ்ணுவிற்கு செல்வத்தை வாரி வழங்க, அவரும் பக்தர்களை பணக்காரர்களாக்குகிறார். இந்தச் சுழற்சி தொடர்ந்து நடைபெற்று இந்தியாவில் பணக்கார இந்து கோவிலாக திருப்பதியை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, கருவறை கூரையானது முழுமையாக தங்கத்தால் மூடப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு ஆண்டு முழுவதும் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருகின்றனர். பிரம்மோற்சவம் போன்ற விசேஷங்களின் போது இந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயரும்.
இந்த அளவிற்கு பக்தர்களிடமிருந்து காணிக்கைகள் குவிந்தாலும், குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க விஷ்ணு பகவானால் முடியவில்லை. இதனால், வைகுண்டத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாமல், நிரந்தரமாய் பூமியிலேயே சிக்கிக்கொண்டிருக்கிறார்.