Published: 09 பிப் 2018
ஹால்மார்க்கிங் விதிகளில் சமீபத்திய மாற்றங்கள்
தங்கத்தை ஹால்மார்க்கிங் செய்வதன் பலன் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம், உள்ளூர் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது மேலும் சர்வதேச பொருள் வாங்குநர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கிறது என்பதை கொள்கை உருவாக்குநர்கள், ஒழுங்குமுறைபடுத்துபவர்கள் மற்றும் உலகளாவிய சந்தையில் பங்குபெறுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
இது இந்தியாவில் பெருமளவிலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், நாட்டின் தங்கத் தொழில்துறையை முறைப்படுத்துவதில் உதவும், சந்தையில் வாடிக்கையாளருக்கு இருக்கும் நம்பிக்கையை பலப்படுத்தும் மேலும் இந்திய நகை வியாபாரிகள் உலகச் சந்தையில் முன்னணி வகுப்பதை உறுதிப்படுத்தும். அதிக முதிர்ச்சி மற்றும் சர்வதேச ஏற்புடைமை ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு தொழில்துறையை விரிவுபடுத்தும், இதனால் உள்ளூர் பொருளாதாரம் பலனடையும் மேலும் குறிப்பிடத்தக்க அளவு வேலைவாய்ப்பு உருவாகும்.
இந்தப் பின்னணியில், 2000 ஆவது ஆண்டு ஏப்ரலில் தன்னார்வமாக ஹால்மார்க் செய்யும் முறையை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டேண்டர்ட் (BIS) அறிமுகப்படுத்தியது. மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில், பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டேண்டர்ட் (BIS) சட்டம், 1986-ல் திருத்தங்களை செய்யும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கட்டாய ஹால்மார்க்கிங் முறையை தங்கம் போன்ற பொருள்களுக்கும் விரிவாக்குவதே இதன் நோக்கம்.
நீண்ட நெடுங்காலத்துக்கு, ஹால்மார்க்கிங் செய்வது தன்னார்வமானதாகவே இருந்துவந்தது. இதனால், தங்க நகை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், தங்கத்துக்கு குறிப்பிட்ட விலை வைக்கவேண்டிய தேவையின்றி இருந்தனர். நேர்மையற்ற நகை வியாபாரிகளிடமிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கு, சான்றிதழ் பெறவேண்டியதை கட்டாயமாக்குவதற்கு இந்த திருத்தங்கள் அரசுக்கு அதிகாரம் அளித்தன. BIS ஹால்மார்க், உறுதியளிக்கும் ஒரு முத்திரையாக வாடிக்கையாளரால் பரவலாக ஏற்கப்பட்ட ஒன்று, தங்க நகை போன்ற பொருள்களின் தரம் பற்றிய நம்பிக்கையை வாடிக்கையாளரிடம் இது ஏற்படுத்தியது.
2017 ஜனவரியில், ஹால்மார்க்கின் தரநிலைகளை மாற்றியமைத்தது. இதன்படி ஹால்மார்க் செய்யப்பட்ட நகை விற்கும் விற்பனையாளர்கள் அதை 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் கிரேடுகளில் மட்டுமே விற்கமுடியும்.
"தங்கம் மற்றும் தங்க கலப்பு உலோகங்கள் அவற்றின் நுணுக்கத்தைப் பொருத்து 22, 18 மற்றும் 14 காரட் என்ற அளவுகளில் வகைப்படுத்தப்படவேண்டும். இந்த வகைப்படுத்தல்கள் தங்க நகைகள் / கலைப் பொருள்களுக்கும் பொருந்தும்." BIS வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விதி நகை விற்பனையாளர்களுக்கும் அழுத்தத்தைக் கொடுத்தது, ஏனெனில் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு காரட்களில் ஆபரணங்களைக் கேட்டனர். இது நகை விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே மேலும் நம்பகமில்லாதன்மையை மட்டுமே உருவாக்கும். எனினும், மத்திய அரசு மேலும் திருத்தங்களைச் செய்ய எண்ணியிருக்கிறது. இதன் மூலம் பல காரட் வகைகளை சேர்த்து, 2018-ல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்க எண்ணியுள்ளது.
இந்த விதிமுறைகள் நகை உற்பத்தித் துறையில் தூய்மையை உறுதிப்படுத்தும், ஆனால் வாடிக்கையாளருக்கு இன்னும் சிறப்பாக சேவை புரிய விதிமுறைகளில் இன்னும் தெளிவாக இருக்கவேண்டும் என தொழில்துறை எதிர்பார்க்கிறது.