Published: 20 பிப் 2018
சகாப்தங்களைக் கடந்த இந்திய தங்க நகைகளின் வரலாறு
தங்க நகையை விரும்பாத இந்தியப் பெண்மணியைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போது தொடங்கியது. தங்க நகையின் வரலாறு நாட்டின் வரலாற்றையே எடுத்துரைக்கிறது. கலாச்சாரம், வரலாறு மற்றும் அதன் அழகியலின் பளிச்சென்ற வெளிப்பாடே தங்க நகை. இலக்கியம், பழங்கதைகள், புனைவுகள் மற்றும் கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்ட இவை பாரம்பரியத்தின் சான்றாக விளங்கும் இதற்கு உலகில் ஈடுஇணையே இல்லை.
நாம் இன்னும் ஆழமாகச் சென்று பல்வேறு சாகாப்தங்களில் இந்திய நகைகளின் வரலாற்றைப் பார்ப்போம்.
சிந்து சமவெளி நாகரிகம் (2600 மற்றும் 1900 BCE)
சிந்து சமவெளி நாகரிக மக்கள் நன்கு வளர்ச்சியடைந்த அழகியல் உணர்வு, நுண்ணிய பொறியியல் அறிவு மற்றும் நுட்பங்களைக் கொண்டிருந்தனர். தொழில்நுட்பத் திறனைக் கடந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வடிவமைப்பின் தொடர்ச்சிதான் நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது. ராஜஸ்தானி போர்லா, சிந்து சமவெளி நாகரித்தில் பயன்படுத்தப்பட்ட தங்கத் தகட்டிலான நெற்றியில் அணியும் ஆபரணத்தின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. பிரபலமான பண்டைய சிலைகளில் ஒன்றான டிடர்கஞ் யாக்ஷியின் நெற்றியில் இந்த ஆபரணத்தை நீங்கள் பார்க்கலாம்.
சங்க காலம் (4ஆம் நூற்றாண்டு BC முதல் 2ஆம் நூற்றாண்டு AD வரை)
மொஹஞ்சதாரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்திய நகை மிகவும் மென்மையானதாகவும் நுணுக்கமானதாகவும் மாறியது. சங்க காலத்தின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், தங்கம், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் முத்துக்களைப் பயன்படுத்திய சமூகத்தைப் பற்றிக் கூறுகிறது. போர்சுகீசியப் பயணியின் தி குரோனிகல்ஸ் ஆஃப் பயஸ், விஜயநகரப் பேரரசின் மக்கள் அணிந்திருந்த பிரமிக்கத்தக்க நகைகளை படமாக காட்டியிருக்கிறது. இந்த நுணுக்கமான, கனமான நகையில் ரூபிக்கள், எமரால்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. இவை முதலில் கோயில்களில் உள்ள விக்கிரகங்களுக்கு அணிவிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டன. எனினும், காலப்போக்கில் பரதநாட்டியம் பெருமளவு பரவியபோது, இந்த நகைகள் நாட்டியமாடுபவர்களின் கைக்கு எட்டியது, பிறகு வழிவழியாகவும் மணப்பெண்ணுக்கான திருமணப் பரிசாகவும் சாமானிய மக்களிடமும் புழங்கத் தொடங்கியது.
முகலாயர்கள் காலம் (1526- 1857)
முகலாயர்களின் ஆதரவு, பாரம்பரிய இந்திய நகைகளை மேலும் மெருகூட்டியது, புதுமையான வடிவமைப்பு நுட்பங்களைக் கொண்டுவந்தது. மத்திய ஆசியாவின் பாணியும் இந்தியாவின் நுட்பமும் இணைந்து, உலகம் முன்னெப்போதும் பார்த்திராத செழிப்பையும் ஆடம்பரத்தையும் பறைசாற்றும் அழகிய நேர்த்தியான நகைகளை உருவாக்கியது. முகலாயர்கள் காலத்தில் உச்சத்தைத் தொட்ட நகைக்கு மூலாம் பூசும் தொழில்நுட்பம் பண்டைய நகரமான டக்ஸிலாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பண்டைய இந்திய வடிவமைப்புகள் பிறகு இயற்கையைப் பிரதிபலிக்கும் பூக்கள் மற்றும் கோடுகளைக் கொண்ட வடிவங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றப்பட்டது. இந்தியக் கைவினைஞர்கள் முகலாயர்களின் குந்தன் மற்றும் ஜடாவ் தொழில்நுட்பங்களில் தேர்ச்சிபெற்று, மற்றவர்கள் பார்த்துப் பின்பற்ற இயலாத வகையில் தங்களின் சொந்த பிரத்யேகமான வடிவமைப்புகளை உருவாக்கினர்.
ஆங்கிலேயர் காலம் (1858- 1947)
நாட்டின் காலனி ஆட்சியாளர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நகை வடிவமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கினர். புகழ்பெற்ற ஐரோப்பிய நகை உற்பத்தியாளரான கார்டியர், மகாராஜாக்களுக்கான நகைகளை உருவாக்கத் தொடங்கியது. இது வேறு வழியிலும் வேலை செய்தது. உதாரணமாக, கார்டியரின் பிரபலமான "டூட்டி ஃப்ரூட்டி" வடிவமைப்பு, ரூபிகள், எமரால்டுகள் மற்றும் சஃபையர்கள் பதிக்கப்பட்ட பூ வடிவ தென்னிந்திய நகைகளின் தாக்கத்தைக் கொண்டிருந்தது.
இந்திய நகைகள் நீண்ட நெடிய வரலாற்றைத் கொண்டதாக இருந்தாலும், அது சந்தேகத்துக்கு இடமின்றி தங்கத்தின் மீதான வசீகரத்தையும் ஆர்வத்தையும் பன்மடங்குப் பெருக்கியுள்ளது. இந்த சமகால உலகத்தில், நவீன பாணிகளை அடிப்படையாகக் கொண்ட புதிய வடிவமைப்புகள் வந்திருந்தாலும் கூட, அனைவரையும் தொடர்ந்து வசியப்படுத்தும் நுணுக்கமான அழகிய பாரம்பரிய நகை வடிவமைப்புகளுக்கு ஈடுஇணையில்லை.