Published: 27 செப் 2017
கோலார் தங்க வயல்களின் கதை
கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயல்கள், கர்நாடகாவில் உள்ள தற்போதைய பெங்களுருவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. - இந்தியாவின் பழமையான தங்கச் சுரங்கம் இதுவாகும். கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்து, கி.பி 900 முதல் கி.பி 1000 ஆண்டுகளில் சோழர்கள் சாம்ராஜ்ஜியத்தின் காலப்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் காலப்பகுதியிலும், 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் மைசூர் அரசரான திப்பு சுல்தானின் ஆட்சிக்காலம் வரை தங்கம் அகழப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பல நூற்றாண்டுகளாக, தென்னிந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு கணிசமான அளவு செல்வத்தை கோலார் தங்க வயல்கள் வழங்கின.
இந்தியாவில் உள்ள ஆழமான சுரங்கங்களில் ஒன்றான இதில், 1980களில் மற்றும் 1990களில் பூமியின் மேற்பரப்புக்கு கீழே 3 கி.மீ ஆழத்தில் தங்கம் தோண்டியெடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சில சுரங்கங்கள் மட்டுமே ஆழமானதாக உள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை கையகப்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ் சுரங்க நிறுவனமான ஜான் டெய்லர் என்ற நிறுவனமானது, 1920களில் சுரங்கத்தில் மின்சக்தியை நிறுவியது - அப்பொழுது தென்னிந்தியாவின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. 1930களில், ஜான் டெய்லரின் லண்டன் அலுவலகத்தை ஒரு கிலோமீட்டர் ஆழமான நிலப்பகுதியில் இருந்து நீங்கள் நேரடியாக அழைக்கலாம் என்று அந்த நிறுவனம் பெருமையாக அறிவித்தது.
இந்த அதிகமான ஆழத்தில் சுரங்கங்களை தோண்டுவதற்கு தனித்துவமான உபகரணங்கள் தேவை; 1940களில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில், தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய முறுக்கும் டிரம்-ஐ KGF கொண்டிருந்தது. ஜான் டெய்லர் குழுமத்தால் நிறுவப்பட்ட பெரும்பாலான கருவிகள் 50 முதல் 100 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும்கூட, 1990கள் வரை அவை இயங்கிக்கொண்டிருந்தன. அதற்கு அசல் உற்பத்தியாளர்களும், பாரத் மைன்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான சிறந்த பராமரிப்பும் பாராட்டுக்குரியவை ஆகும்.
1880 முதல் 2001 வரை, 120 ஆண்டுகளாக நவீன சுரங்கங்கள் செயல்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்பட்ட தங்கத்தின் அளவானது செயல்பாட்டு செலவினங்களை பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இல்லை என்பதால், அரசுக்கு சொந்தமான பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நிறுவனமானது செயல்பாடுகளை நிறுத்தியது. ஆனால் KGF-ன் ஆயுள் முடிந்திருக்காது; என்றும் முடிவடையாது.
ஜூலை 2010-ல், இந்தியாவில் சுரங்கங்களை மீண்டும் தொடங்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது; அது தங்க சுரங்கங்களை உள்ளடக்கிய சுரங்கங்களை ஏலம் விட அனுமதித்தது. KGF ஏலம் விடப்படும் என்று நரேந்திர மோடி அரசாங்கம் 2016ஆம் ஆண்டில் அறிவித்தது. எனவே, அடுத்த சில ஆண்டுகளில், தென்னிந்தியாவின் முதல் மின்மயமாக்கப்பட்ட நகரமாக இருந்த, ஆனால் இப்போது ஒரு பேய் நகரமாக உள்ள, கோலாரில் விளக்குகள் மீண்டும் எரியலாம்.