Published: 05 செப் 2017
தங்கத்தின் மீதான கிராமப்புற இந்தியர்களின் நம்பிக்கை
இந்தியா நாடானது, கிராமப்புறங்களில் 60% மக்கள்தொகையைக் கொண்டுள்ள பரந்த நாடாக உள்ளது. வேலைகள், வசதிகள், வாழ்க்கை முறை ஆகியவற்றில் நகர்ப்புற இந்தியர்கள் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், கிராமப்புற இந்தியாவில் இப்பொழுது முன்னேறும் வேகம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முன்னதாக, ஒரு குடும்பத்தின் நிதி நிலை என்பது அவர்கள் வைத்திருந்த தங்கத்தின் அளவைப் பொறுத்து இருந்தது. திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் தங்களுடைய ஆபரணங்களின் மூலம் தங்களுடைய குடும்பத்தின் செல்வத்தை வெளிப்படுத்தினர், மேலும் தங்கம் என்பது எப்பொழுதும் அதை வெளிக்காட்டுவதற்கு மிகவும் வலிமையான முறையாகும்.
தங்கம் ஆனது ஒரு நபரிடம் இருக்கக்கூடிய சொத்துக்களில் எளிதாகப் பணமாக்கக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கத்தை பணமாக மாற்றுவது எளிதானதாகும். மேலும், அதன் மறுவிற்பனை மதிப்பு என்பது மற்ற முதலீடுகளுடன் ஒப்பீட்டளவில் அதிகமாகும். எனவே, கிராமவாசிகள், ஒரு நெருக்கடியின்போது, பணம் பெறுவதற்காக வங்கிக்கு செல்வதை விட நகையை அடகு வைப்பதை எளிதாகக் கருதுகின்றனர்.
இந்தியாவில் வாங்கப்படும் தங்கத்தில் மூன்றில் - இரண்டு பகுதியை கிராமப்புற மக்கள் வாங்குகிறார்கள் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. தங்க நகைகள் / தங்கம் ஆகியவை உரிமையாளரிடம் நீண்ட நேரம் தங்கியிருக்கும் என்ற நம்பிக்கையே, தங்கத்தின் மீதான இந்தப் பிடிப்புக்குக் காரணமாக உள்ளது.
கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற இந்தியாவின் தென் மாநிலங்களில், சராசரியாக ஒரு மணமகள் தனது திருமண நாளில் 300 கிராம் தங்கத்தை அணிந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்த உடனேயே நகைகளை வாங்கத் தொடங்குகிறார்கள். திருமணங்கள், மங்களகரமான நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றைத் தவிர, அறுவடை பருவத்தின் முடிவில் கிராமப்புற இந்தியாவில் பெரும்பாலும் தங்கத்தை வாங்குகிறார்கள். திருமணத்திற்கு தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்றும், அதை எளிதில் பணமாக முடியும் என்றும் கிராமப்புற இந்தியர்கள் கருதுகிறார்கள்.
தங்கம் என்பது அலங்காரத்திற்கான உலோகமாக மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கான சேமிப்பாகவும் உள்ளது. அதன் மின்னும்தன்மையானது நுகர்வோரின், குறிப்பாக கிராமப்புற இந்தியர்களின் கண்களைக் கவர்கிறது. தங்கத்தை நேசிக்கும் நமது நாட்டில் அதன் வளரும் போக்கு தொடரும் என நம்பப்படுகிறது.