Published: 27 செப் 2017
எதிர்பாராத தங்கம்: விண்கற்கள்
கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள சுரங்கங்களில் தோண்டியெடுக்கக்கூடிய தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து கொண்டு வருவதால், தங்கத்தின் எதிர்காலமானது, ஆபத்தில் இருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய முதலீட்டு ஆராய்ச்சிக் குழுவின் கருத்துப்படி, நடப்பு உற்பத்தி விகிதத்தின்படி கணக்கிட்டால், 20 ஆண்டுகளுக்கு தோண்டியெடுக்கக்கூடிய அளவு மட்டுமே தங்கத்தின் இருப்பு உள்ளது. படிமங்கள் மற்றும் சுரங்கங்கள் உள்ள உலோகத்தின் குறைவான செறிவு காரணமாக, சுரங்கத்தில் தங்கத்தை எடுப்பதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் நம் வாழ்வில் பெரிதும் பிணைந்திருக்கிறது. நம் பற்களைப் பாதுகாப்பதற்கான பல் சிகிச்சை, நம்மை அலங்கரித்துக் கொள்வதற்கான நகைகள் ஆகியவற்றுக்கு நாம் அதைப் பயன்படுத்துகிறோம். மேலும், நமது எல்லா மின்னணு சாதனங்களிலும் தங்கம் உள்ளது. தங்கம் இல்லாமல் போவது என்பது நமது கிரகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளை மிகவும் கடுமையாகப் பாதிக்கும். இந்த காரணங்களுக்காக, விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தங்கத்திற்கு மாற்றான வளங்களைக் கண்டுபிடிக்க முனைகிறார்கள், மேலும் அவர்களில் சிலர் வானத்தை நோக்கிப் பார்க்கிறார்கள்.
விண்கற்கள் என்பவை சூரியனை சுற்றும் சிறிய பாறை போன்ற பொருட்கள் ஆகும். அவை கிரகங்களை விட மிகவும் சிறியதாக இருக்கும் மற்றும் அவை ஒழுங்கற்ற வடிவங்களில் இருக்கும். இருப்பினும், சில விண்கற்கள், மிதக்கும் தங்கச் சுரங்கங்களாக இருக்கலாம். 1998ஆம் ஆண்டில், நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள விண்கல் சந்திப்பு (நியர்) விண்கலமானது ஈரோஸ் என்ற ஒரு விண்கல் வழியாக பயணித்தது. ஈரோஸ் என்பது 33 கிமீ-க்கு 13 கி.மீ-க்கு 13 கி.மீ என்ற பரிமாணத்தில் உள்ள ஒரு ஒழுங்கற்ற வடிவிலான விண்கல் ஆகும். அது தங்கம், பிளாட்டினம், துத்தநாகம், அலுமினியம், வெள்ளி மற்றும் பலவற்றையும் உள்ளடக்கிய $ 20,000 பில்லியன் டாலர் மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன.
ஈரோஸ் என்பது பூமியில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆராயப்பட்ட விண்கற்களைப் போன்றது என்றால், ஈரோஸ் நிறையில் குறைந்தது 3 சதவீதம் என்ற அளவில் உலோகம் இருக்கலாம் என்று நாசா மதிப்பிடுகிறது. ஈரோஸில் 1,000 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இவ்வளவு பெரிய தங்கத்தை வைத்து சந்தையில் என்ன செய்ய முடியும் என்று நாம் யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால், ஈரோஸில் சுரங்கம் தோண்ட ஆரம்பிக்கப்பட்டால், இந்த விலைமதிப்பற்ற உலோகங்களை பூமிக்கு திரும்பக் கொண்டுவருவதில் உள்ள சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்று இப்போது நாசா முயன்று கொண்டிருக்கிறது.