Published: 31 ஆக 2017
உலகின் மிகப்பெரிய தங்கக் கோவில்
"தங்கக் கோவில்" என்ற வார்த்தையானது, இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள அமிர்தசரஸின் அற்புதமான பொற்கோவிலை நினைவூட்டுகிறது. ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பின் குருத்வாரா என்பது சீக்கிய சமுதாயத்தின் புனிதமான இடமாகும். எனினும், தென்னிந்தியாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி கோவில் என்பது உலகின் மிகப்பெரிய தங்கக் கோவில் என்ற மகுடத்தை சூடியுள்ளது.
செல்வச் செழிப்பு மற்றும் வளமை ஆகியவற்றின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு இக்கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ லக்ஷ்மியின் கோவிலானது தமிழ்நாட்டில் வேலூர் நகரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைக்கோடியின் சிறு குன்றுகளில் அமைந்துள்ளது.
2001ஆம் ஆண்டில் தங்கக் கோவில் கட்டுமானத்தை ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ சக்தி அம்மா என்பவர் தொடங்கினார், இது 2007-ல் நிறைவடைந்தது. இந்த அற்புதமான கோவிலானது 100 ஏக்கர் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது, இது மதிநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட நட்சத்திரப் - பாதையால் (ஸ்ரீ சக்ரா) சூழப்பட்டுள்ளது. இந்த 1.8 கி.மீ. பாதையானது இயற்கை அன்னையிடம் இருந்து ஆற்றலை கிரகிப்பதாக நம்பப்படுகிறது, எனவே இதில் நடக்கும் பக்தர்களுக்கு சமாதானத்தையும் ஆரோக்கியத்தையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது. அற்புதமான தங்கக் கோவிலானது நட்சத்திரப் – பாதையின் மையத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி கோவிலானது 1500 கிலோகிராம் தங்கத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இது அமிர்தசரஸின் பொற்கோவிலை விட இரு மடங்கு ஆகும். இந்த கோவிலின் பாரம்பரிய வேதகால கட்டிடக்கலை அம்சங்களானது, பண்டைய இந்தியாவின் அறிவு நூல்களான வேதங்களில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களைக் காட்டுகின்றன. தனித்துவமான பாணியிலான கட்டிடக்கலை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி கோவிலானது மற்ற புனித இடங்களிலிருந்து தனித்து அமைகிறது.
ஆலய வேலைகளைச் செய்த கைவினைஞர்கள் ஒரு தலைசிறந்த படைப்பை உருவாக்கியுள்ளனர். நேர்த்தியான கலையுணர்வு மூலம் தங்கக் கட்டிகளானது படலங்களில் மிகச்சரியாக பொருத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் கைமுறையாக வடிவமைத்து, செப்பு மீது இந்த படலங்களை ஏற்றியுள்ளனர். கர்ப்பகிரகம் (கருவறை) மற்றும் கர்ப்பகிரகத்திற்கும் கோவிலின் வெளிப்புறத்திற்கும் இடையிலான இடைவெளியான அர்த்த மண்டபம் ஆகியவை தங்கத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கோவிலின் தங்கக் கோபுரத்தின் பிரகாசத்தை தொலைவில் இருந்தே பார்க்கலாம்.
தெய்வீக ஒளியைப் பிரதிபலிக்கும் லக்ஷ்மி தேவியின் அழகும் வளமும் இந்தக் கோவிலில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி கோவில் என்பது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பக்தர்கள் வருகை தரும் 'தங்க தேவியின்' வழிபாட்டுக்கான முக்கிய இடமாக உருவாகியுள்ளது.