Published: 28 ஆக 2017
பிரிட்டிஷ் காலத்தின் தங்க நாணயங்கள்
பண்டையக் காலங்களைப் போலன்றி, நவீன இந்தியாவில் நாணயங்களின் பயன்பாடு குறைந்து, காகிதப் பணம் மற்றும் 'பிளாஸ்டிக் பணம்' ஆகியவற்றை மிகுதியாகச் சார்ந்துள்ளது. எனினும், பண்டையக் காலமானது வேறு கதையைச் சொல்கிறது; நாணயங்கள் என்பது வர்த்தகத்தின் ஒரு வழிமுறையாக இருந்தது, மேலும் ஆளும் வம்சத்தினரால் அவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. நாணயங்கள் முதலில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் அவை ஓடுகள் மற்றும் பல்வேறு உலோகங்களால் வடிவமைக்கப்பட்டன. வம்சாவளியினர் செல்வத்தை குவித்து வைத்திருந்தபோது, அவர்கள் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். கிழக்கு இந்திய கம்பெனி இந்திய மண்ணில் கால் பதித்த 17ஆம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், 1835-க்கு முந்தைய காலப்பகுதியில் வெளியிடப்பட்ட கிழக்கு இந்திய கம்பெனி (EIC) நாணயங்கள், மற்றும் இந்திய நாடானது ஆங்கிலேய அரசின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருந்த காலமான இம்பீரியல் காலம் என இரண்டு காலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
கிழக்கு இந்திய கம்பெனி என்பது, சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் மற்றும் பெங்கால் (கொல்கத்தா) பிரசிடென்சி போன்ற 'பிரசிடென்சிஸ்' என்று அறியப்பட்ட பல்வேறு நகரங்களில் அதன் காலனிகளை உருவாக்கியது. கிழக்கு இந்திய கம்பெனியானது, அதன் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு விதமான நாணயங்களை வெளியிட்டது. பம்பாயில் வெளியிடப்பட்ட நாணயங்களில், பின் பக்கத்தில் ஒரு தராசு உடன் ஒரு இதய வடிவிலான மூட்டை குறியீடு இருந்தது. சீரான மேற்பரப்புகளில் தேவையான வடிவங்களில் உருவாக்கப்பட்ட இந்த நாணயங்கள், மிகச்சிறந்த கைவினைத்திறனுக்கான ஓர் உதாரணமாகும்.
1857-58ஆம் ஆண்டில், பிரிட்டிஷ்-இந்தியாவின் அதிகாரம் கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசிடம் மாற்றப்பட்டபோது, அவர்களது ஆட்சியின் கீழ் இருந்த அனைத்துப் பிரதேசங்களிலும் ஒரே சீரான நாணயங்கள் வெளியிடப்பட்டன. இது இம்பீரியல் காலமாகும். பிரிட்டிஷ் அரசர்கள் மற்றும் ராணிகள் ஆகியோரின் சித்திரத்தை, பிரதானமாக ராணி விக்டோரியாவின் சித்திரத்தை சித்தரிக்கும் பல நாணயங்களை அரசு வெளியிட்டது. 1862ஆம் ஆண்டில், ராணி விக்டோரியாவின் முடிசூட்டப்பட்ட, மார்பளவு கொண்ட முதல் தங்க நாணயத்தை வெளியிட்டது; இது ஒரு மொஹூர் (தங்க நாணயம்) என்று அழைக்கப்பட்டது. 11.66 கிராம் எடையுள்ள நாணயங்கள் அல்லது 0.9167 துல்லியம் கொண்ட ஒரு "டோலா" (கிழக்கு இந்திய கம்பெனி வெளியிட்ட தங்க நாணயங்களைப் போன்றது) என்பது இந்திய வர்த்தகத்தில் விநியோகிக்கப்பட்டன. ஒரு மொஹுரின் மதிப்பு என்பது பதினைந்து வெள்ளி ரூபாய்களுக்கு சமமானதாகும். இருப்பினும், குறைந்த அளவிலான நாணய அச்சடிப்பு காரணமாக, மற்ற உலோக நாணயங்களுடன் ஒப்பிடுகையில் மொஹுரின் அளவு குறைவாக இருந்தது.
அவரது தோற்றத்துடன், நாணயங்களில் "ராணி விக்டோரியா" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டன. 1876ஆம் ஆண்டில், 'இந்தியாவின் பேரரசி' என்ற பட்டத்தை விக்டோரியா ராணி சூடிக்கொண்ட பிறகு, அதன் பிறகு வெளியிடப்பட்ட நாணயங்களில் "விக்டோரியா பேரரசி" என்ற வார்த்தை இடம்பெற்றது.
ராணி விக்டோரியா உள்ள தங்க நாணயங்களானது நகைகளில் ஒரு பதக்கமாக அல்லது நெக்லஸ்களாக, முக்கியமாக தென் இந்தியாவில் இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் நாணயங்களில் இந்திய-பிரிட்டிஷ் சகாப்த தங்க நாணயங்களானது எப்பொழுதும் குறிப்பிடத்தக்க இடத்தைக் கொண்டிருக்கும்.