Published: 15 மார் 2018
இராவணனின் தங்க இராஜ்ஜியம் – வெற்றியும் வீழ்ச்சியும்
இராமாயண காவியத்தில் பெரும்பாலானோர் இந்தியாவில் இராவணனை கெட்டவனாகப் பார்க்கும் அதே சமயத்தில், வெகு சிலர் மட்டுமே அவரை சிறந்த கல்விமானாகவும் மற்றும் சிவபெருமானின் தீவிர பக்தனாகவும் அறிவர். மேலும் அவர் தசானன் அல்லது பத்து தலை உடையவராக அறியப்படுகிறார். அவரது பத்து தலைகள், அவரை நான்கு வேதங்கள் மற்றும் ஆறு உபநிடதங்களின் வழியாக முழுமையான அறிவைப் பெற்றவராக அடையாளப்படுத்துகின்றன. இதனால் அவர் அதீத படிப்பாளியாக உருவானார். மேலும், பாரம்பரிய நரம்பு இசைக்கருவியான வீணையை அழகாக வாசிப்பதிலும் அவர் கைத்தேர்ந்தவர் ஆவார்.
இராவணன் அவரது கற்பனைத் தலைநகரான ஸ்வர்ண லங்காவிற்கு எப்படி உரிமையாளரானார் என்பதைப் பற்றிய கதை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நமது புராணங்களின் படி, ஒருமுறை சிவபெருமானின் மனைவி பார்வதிக்கு, துறவு வாழ்க்கை மற்றும் இமாலயக் குளிரில் வாழும் வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே, அவர் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் சிவனிடம், தங்களுக்காக ஒரு வீடு கட்டச் சொல்லி வேண்டினார். சிவபெருமானோ இகலோக வாழ்க்கையில் பற்றற்று துறவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். குடும்பத் தலைவராக வாழும் வாழ்க்கை அவருக்கு முற்றிலும் அந்நியமான கருத்தாக்கம் ஆகும். ஆனாலும், ஒரு அன்பான கணவர் என்கிற முறையில் அவர் பார்வதியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக சிவன், இராவணனை திட்ட மேலாளராக நியமித்து ஸ்வர்ண லங்கா என்றழைக்கப்படும் ஒரு தங்க அரண்மனையை கட்டுமாறு ஆணையிட்டார். பிறகு இராவணன், அரண்மனையை கட்டுமானிக்கத் தேவையான தங்கத்திற்காக அந்த காலத்தில் மிகுந்த செல்வந்தனாக விளங்கிய தன்னுடைய ஒன்று விட்ட சகோதரன் குபேரனை அணுகினார். குபேரன் அந்த மஞ்சள் உலோகத்தை நன்கொடையாக அளித்த பிறகு, இராவணன், சிவபெருமானுக்காக தங்க மாளிகை கட்டுவதற்கு சிற்பியும் மற்றும் கட்டடக்கலைப் பொறியாளருமான விஸ்வகர்மாவை வேலைக்கு அமர்த்தினார். சில காலத்திற்கு பிறகு விஸ்வகர்மா ஒரு மிகுந்த அழகான ஈடு இணையற்ற ஒரு தங்க மாளிகையைக் கட்டினார்.
சிவபெருமான், பாரம்பரியப்படி ‘கிரஹ பிரவேச பூஜை’ க்கு ஏற்பாடு செய்தார். இந்தியாவில் இந்து சமுதாயத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடியேறுவதற்கு முன் கடவுளுக்கு காணிக்கைகள் செலுத்துவது வழக்கமாக உள்ளது. இராவணன் மெத்த படித்த அறிஞர் என்பதால் பூசாரியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அவருடைய ‘தட்சணை’ அல்லது ஊதியத்தை தீர்ப்பதற்கான நேரம் வந்த போது இராவணன் தன்னுடைய கட்டணமாக தங்க மாளிகையைக் கேட்டு அனைவரையும் திடுக்கிடச் செய்தார். ஒருவேளை சிவனின் விருப்பம் கட்டட வேலைப்பாடாக இருக்கலாம் (அவர் உண்மையில் அரண்மனையில் வாழ விரும்பவில்லை) அந்த அற்புதமான மாளிகையைப் பார்த்ததும் இராவணன் பேராசைக்காரனாக மாறினான். எனவே, சிவபெருமான், இராவணனுக்கு ஸ்வர்ண லங்காவை கொடுத்துவிட்டு கைலாச மலையில் இமாலயத்தில் உள்ள தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார். சிவபெருமானின் தீவிர பக்தரான நந்தி, இராவணனின் இந்த நடவடிக்கையால் கடும் சினம் கொண்டு அவருடைய அன்புக்குரிய மாளிகை, அற்ப குரங்கினால் அழிக்கப்படும் என்று சாபமிட்டார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு குரங்குக் கடவுளான அனுமான், சீதாப்பிராட்டியைத் தேடி ஸ்வர்ண லங்காவை அடைந்தார். அதிகாரம் மற்றும் செல்வத்தின் போதை மயக்கத்திலிருந்த இராவணன் அனுமனை அவமதித்து அவருடைய வாலுக்கு நெருப்பு வைக்கும் படி ஆணையிட்டான். அனுமன் தப்பித்து சரியான நேரத்தில் இராவணனின் அரண்மனைக்கு நெருப்பு மூட்டி அதை சாம்பலாக்கினார். இப்படித் தான் இராவணன் அவனுடைய தங்க அரண்மனையை இழந்தான்.