Published: 20 பிப் 2018
இந்தியாவின் தங்கம், இங்கிலாந்துக்கு லாபம்?
உங்களுக்கு சர் ஐசக் நியூட்டனைத் தெரியுமா - ஆம், நாம் உயர்நிலைப் பள்ளியில் படித்த இயக்க விதிகளை வரையறை செய்தவர்தான் - அவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார் தெரியுமா? பல வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது போல, அவர் இந்தியாவின் ஆர்யபட்டா கண்டுபிடித்ததாகக் கூறப்படும் புவிஈர்ப்புக் கொள்கையையோ அல்லது கேல்குலஸையோ திருடிச்செல்ல வரவில்லை. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசாங்க தங்கசாலையின் தலைவராக இங்கே வந்திருந்தார்.
1699ல், அரசாங்க தங்கசாலையின் தலைவராக நியூட்டன் நியமிக்கப்பட்டார். பிரிட்டனின் நாணயங்கள் மற்றும் அவற்றின் மாற்று மதிப்புகள் குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கு இந்த அரசாங்க தங்கசாலைதான் பொறுப்பு. இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கல்வியாளர் பதவியை ராஜினாமா செய்தார். 1727ல் இறக்கும் வரை அவர் தங்கசாலைத் தலைவர் பதவியில் இருந்தார்.
1702ல், இங்கிலாந்து ஃபிரான்சுடன் சேர்ந்து நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினுக்கு எதிராக இசுப்பானிய வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர் நீண்டகாலம், 13 ஆண்டுகள் நடந்தது, 1714ல் அந்தப் போர் முடிவதற்கு முன்பு, அதன் காரணமாக இங்கிலாந்தின் தங்கக் கையிருப்பு குறைந்தது, கரன்சியும் பலவீனமடைந்தது. இந்தியாவில், தங்கம் பெருமளவு இருந்தது, 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் விலை 1:10 (தங்கத்துக்கும் வெள்ளிக்குமான விகிதம்) என்ற அளவிலிருந்து 1:9 க்கு சரிந்தது. அந்த நேரத்தில் இங்கிலாந்தில் இந்த விகிதம் 1:15 ஆக இருந்தது. எனவே, இங்கிலாந்தின் நிதிநிலையை சரிசெய்வதற்கு விலை மலிவான தங்கத்தை வாங்க முடியுமா எனப் பார்ப்பதற்காக அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தங்கம் எடுத்துச்செல்லப்பட்டது அந்த ஒரு முறை மட்டுமல்ல. இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், தங்கத்தின் உள்நாட்டு விலை இந்தியாவில் 10 கிராமுக்கு 21 ரூபாயாக இருந்தது, அதேநேரம் சர்வதேச விலை 10 கிராமுக்கு 34 ரூபாயாக இருந்தது, இதனால் தங்க ஏற்றுமதி லாபகரமானதாக அமைந்தது.
1931ல், பிரிட்டன் தங்கத்தை தரநிலையாக பயன்படுத்தும் முறையிலிருந்து மாறியது, பவுண்டு ஸ்டெர்லிங் கரன்சியின் மதிப்பு குறைந்தது, ஸ்டெர்லிங்குடன் பின்னிப் பிணைந்திருந்த ரூபாயின் மதிப்பும் குறைந்தது. லண்டனில் தங்கத்தின் விலை அதிகமாக இருந்தது, எனவே இந்தியா தங்கம் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. 1931 முதல் 1938க்கு இடையில் இந்தியத் தங்க ஏற்றுமதியின் மதிப்பு 250 மில்லியன் பவுண்டுகளை விட அதிகமாக இருந்தது.
அது ஏன் நிகழ்ந்தது? இந்தியக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கும், கடனைத் திருப்பி செலுத்தவும் தங்க சேமிப்புகளை விற்றுப் பணமாக்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறு செய்வதன் மூலம், எளிதில் பணமாக்கக்கூடிய வளங்களை இங்கிலாந்துக்கு அனுப்புவதில் உதவிக்கொண்டிருந்தனர். இது அந்நாடு தன்னுடைய வர்த்தக சமநிலையையும் இறக்குமதியையும் நிர்வகிக்க உதவியது. இது நிச்சயமாக. 1929ன் மிகப்பெரும் பொருளாதார மந்தநிலையை சமன்செய்வதற்கு உதவியது. இந்தியவின் தங்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள், பலவழிகளில் இங்கிலாந்துக்கு உதவியுள்ளது.