Published: 04 அக் 2018
இந்தியாவில் ஹால்மார்க்கிங் செயல்பாட்டை நிர்வகிப்பவர் யார்?
தங்க நாணயங்களாக இருந்தாலும், தங்கக் கட்டிகளாக இருந்தாலும், மற்றும் சான்றளிக்கப்பட்ட நகைகளாக இருந்தாலும் நாம் வாங்கும் தங்கத்தின் தூய்மையை தெரியப்படுத்தும் செயல்முறையின் பெயர் தங்கத் தர அடையாளக் குறியீடு ஆகும்.
ஆனால் இந்த ஹால்மார்கிங் எங்கே செய்யப்படுகிறது? மேலும் யாரால் இது கட்டுப்படுத்தப்படுகிறது?
தங்க நகைகளுக்கு தர அடையாகக் குறியிடும் ஹால்மார்க்கிங் செயல்முறை நாடு முழுவதும் இருக்கும் தர மதிப்பீட்டு மற்றும் தரக் குறியீட்டு மையங்களால் செய்யப்படுகிறது. இவை BIS ஆல் கண்காணிக்கப்படுகின்றன.
AHC என்றால் என்ன?
AHC க்கள் அல்லது தர மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க் மையங்கள், இந்தியா முழுவதும் இருக்கின்றன, அவை தங்கத்திற்கு தர அடையாள குறியிடும் செயல்முறைக்கு முதுகெலும்பாக செயல்படுகின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (BIS) கீழ் உரிமம் பெற்ற சுமார் 662 AHC மையங்கள் நம் நாட்டில் கிட்டத்தட்ட 20,000 நகைக் கடைகளின் சங்கிலித் தொடர்களுக்கு ஆதரவளிக்கின்றன. BIS சான்றளிக்கப்பட்ட எந்தவொரு நகைக்கடையும், அதன் நகைகளுக்கு தர அடையாளக் குறியீட்டைப் பெறுவதற்காக, 662 BIS அங்கீகாரம் பெற்ற தர மதிப்பீட்டு மற்றும் தர அடையாளக் குறியீட்டு மையங்களில் ஏதேனும் ஒன்றில் தன்னை பதிவு செய்துக் கொள்ளும் உரிமையை கொண்டுள்ளது. இருந்தாலும், தங்க நகைகள் அறிவிக்கப்பட்ட தூய்மையும் நேர்த்தியும் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகே ஹால்மார்க் செய்யப்படுகிறது.
ஹால்மார்க் தேவைகளை பூர்த்தி செய்யாத அல்லது குறிக்கப்பட்ட தரத்தை விட குறைவான தூய்மையைக் கொண்ட எந்தவொரு தங்க நகையையும் உருக்குவதற்கான அதிகாரத்தை AHC கொண்டுள்ளது.
ஹால்மார்க் செயல்முறை
இது விரிவான 3 படிநிலைகளை உள்ளடக்கியது – அவை சமச்சீர்த்தன்மை சோதனை, தூய்மை பரிசோதனை மற்றும் தனித்தனி பொருட்களுக்கு தர அடையாளக் குறியிடுதல். சமச்சீர்த்தன்மை சோதனையில், கொடுக்கப்பட்ட மாதிரிகளுக்குள் எல்லா பொருட்களும் அடிப்படை ஒழுங்கு முறை விதிகளுடன் இணங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த அவை பரிசோதிக்கப்படுகின்றன.
தூய்மைக்கான பரிசோதனை இந்த செயல்முறையில் மிகுந்த சிக்கலான படிநிலையாகும். முதல் படி பரிசோதனைக்கான பொருட்களை தேர்ந்தெடுப்பதாகும்; இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பொருளின் மேற்பரப்பிலும் தொடக்கநிலை சோதனை மேற்கொள்ளப்படுகிறது, அதன் பிறகு ஒவ்வொரு பொருளிலிருந்தும் சிறிய மாதிரிகள் இன்னும் விரிவான சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இறுதியாக, தங்கத்தின் நேர்த்தியான தரத்தை மதிப்பிட தீவிர மதிப்பீட்டு சோதனை செய்யப்படுகிறது. ஒருமுறை கடுமையான பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்ட பிறகு, லேசர் அழுத்தம், அல்லது கைமுறை குறியீட்டின் வழியாக ஹால்மார்க் தர அடையாளக் குறியீடு செய்யப்படுகிறது.
ஹால்மார்க் செயல்முறையை சீராக்கவும் மேம்படுத்தவும் சமீபத்திய முன்னேற்றங்கள்
கடந்த 15 – 17 வருடங்களில் AHC மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாலும், விறபனையாளர்கள் மற்றும் தர முத்திரையிடுபவர்களின் மேற்பார்வை கட்டமைப்பை சீராக்க எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளினாலும் கேரட் அளவீட்டு முறைக்கு குறைவான நகைகள் தயாரிக்கப்படுவது 20-40% லிருந்து 10-15% ஆக குறைந்திருக்கிறது. அது மட்டுமல்ல, கிராமப்புற பகுதிகளிலுள்ள நகைக்கடைகளுக்கு BIS உரிமத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஏஹெச்சி உபகரணத்தின் விலையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் மென்மேலும் அதிக AHC மையங்கள் அமைக்கப்படும்.
உள்ளூர் மக்கள் நன்மையடையும் வகையில் போதுமான அரசாங்க ஆதரவுடன் கிராமப்புறங்களில் அதிகமான AHC மையங்கள் அமைக்கப்படும், இதனால் நகர்ப்புறங்களில் AHC மையங்கள் அதிகமாகத் திரளும் பிரச்சனை அகற்றப்படும். மேலும், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் தர அடையாளக் குறியிடுவதை கட்டாயமாக்க குறிப்பிடத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், தேவைப்படும் இடங்களிலெல்லாம் AHC மையங்களை கட்டமைக்க BIS மற்றும் அரசாங்கம் இணைந்து செயல்படும்.